கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகளுக்கு எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவும், ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவும் எப்போதும் பரம எதிரிகள்தான் என கிரிக்கெட்டில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி 2018-19இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இருப்பினும் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியிருந்த வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்காததால்தான் இந்திய அணி இந்தத் தொடரை வென்றது என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. இதைத்தொடர்ந்து, வரும் நவம்பர் மாதத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதால் இந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த முறையை விட இம்முறை எங்களது அணியில் மாற்றம் இருக்கும் என்பதால் ஆட்டத்திறனும் வேறுவிதமாக இருக்கும். கிரிக்கெட்டின் இரண்டு சிறந்த அணிகள் மோதவுள்ளதால் நிச்சயம் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும். கிட்டத்தட்ட இந்த தொடர் ஆஷஸ் தொடர் போன்று இருக்கும். இந்த தொடரில் நான் பங்கேற்பதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவர்களைக் கெளரவிக்கும் வகையில் மொட்டை அடித்து கொண்ட வார்னர்... கோலிக்கு சாவல்!