பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்பவர் பாபர் அசாம். தனது அதிரடியான ஆட்டத்தினால் ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் கடந்த ஓராண்டாக முதலிடத்தை அவர் தக்கவைத்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியதை அடுத்து, அணியின் கேப்டனாக இருந்த சர்ப்ராஸ் அகமதுவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிய பாக்., கிரிக்கெட் வாரியம், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாமை நியமித்தது.
இந்நிலையில் தற்போது, பாகிஸ்தான் அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நீண்ட காலம் நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அலுவலர் வாசிம் கான் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய வாசிம் கான், “பிசிபியின் தலைவர் இஷான் மணியும், நானும் பிசிபியில் இருக்கும் வரை பாபர் அசாம் தான் கேப்டனாக இருப்பார் என்பதை உறுதி செய்கிறேன். ஏனெனில், அவர் எங்கள் அணியின் நட்சத்திர வீரர் என்பது மட்டுமின்றி இளமையான மற்றும் செயல்திறன்மிக்க வீரர். இதன் காரணமாகவே நாங்கள் அவரை மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமித்துள்ளோம்.
மேலும் முன்னதாக டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அஸர் அலி, தனது பணியை சிறப்பாகவே செய்தார். ஆனால் தற்போது அந்த வாய்ப்பை நாங்கள் பாபர் அசாமிற்கு வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமெரிக்க டி20 லீக் போட்டியில் களமிறங்கவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!