ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் அணி செய்த அதிக பட்ச சாதனை என்னவென்றால் 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்றது மட்டுமே. அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டி வரை சென்றது. இதனைத் தவிர்த்து பார்த்தால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெரும்பாலும் 6 அல்லது 7ஆவது இடங்களையே பிடித்து வருகிறது.
சஞ்சய் பாங்கர், சேவாக், பிராட் ஹாட்ஜ், மைக் ஹசன் எனப் பயிற்சியாளர்கள் பலர் மாறினாலும் ’கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆட்டம்’ மட்டும் மாறவேயில்லை. அதோடு கடந்த வருடம் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் மன்கட் சர்ச்சையில் சிக்கி முன்னாள் வீரர்கள் பலரிடத்திலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்நிலையில் வீரர்களின் ஆட்டத்திறனை முழுமையாக பயன்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியாளர்களை மட்டும் மாற்றி வரும் கிங்ஸ் லெவன் அணி, இம்முறையும் பயிற்சியாளரை மாற்றியுள்ளது. இதில் பயிற்சியாளராக யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றால், இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் அணிகளுக்குப் பயிற்சியளிக்கும் 'ஒரே இந்திய கிரிக்கெட்டர்' என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மற்ற அணிகள் அனைத்தும் வெளிநாட்டு வீரர்களையே பயிற்சியாளராக நியமித்துள்ளது.
அவரே அணி மீதான முழு பொறுப்புகளையும் கவனிக்க உள்ளதாகவும், இந்த வருடம் நிச்சயம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: அஸ்வினை சுழலவிடும் வாய்ப்புகள்- பஞ்சாப் அணியும் கல்தா?