ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைந்தது. முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையிலும் இளம் வீரர்கள் படை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி அசத்தினர். இதனை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட நடராஜன், ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், சுப்மன் கில், வாக்ஷிங்டன் சுந்தர் ஆகிய ஆறு இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மகேந்திரா நிறுவனத்தின் "தார்" கார் பரிசாக வழங்கப்படும் என மகேந்திரா முழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சாதனை படைத்த இளம் வீரர்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷர்துல் தாக்குர்.
தந்தையின் இறப்பிற்கு கூட செல்லாமல் இருந்த முகமது சிராஜ், கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் தொடரில் மொத்தம் அவர் 13 விக்கெட்களை எடுத்தார். அதேபோல் 4வது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்து சுப்மன் கில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியா தொடர் முழுதும் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 67 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.