கரோனா காரணமாக மட்டுமல்லாமல் பிராணவாயு பற்றாக்குறை காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.
மிகப்பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு தாங்கள் எப்பொழுதும் ஆதரவாக இருப்போம் எனப் பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் பிரபலங்களும் இந்தியாவிற்காகப் பிரார்த்திப்பதாகத் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துவருகின்றனர்.
அதேபோல் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் ஐபிஎல் தொடரை நடத்துவது சரிதானா எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரே கேள்வி எழுப்பிவருகின்றனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் பலர் அடுத்தடுத்து நாடு திரும்பிவருகின்றனர்.
இச்சூழலில், ஆடம் ஜாம்பா, ஆண்ட்ரியூ டை, ரிச்சர்ட்சன் எனப் பல ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து நாடு திரும்பிவரும் நிலையில், ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு முக்கிய வீரரான பேட் கம்மின்ஸோ, இந்தியப் பிரதமரின் ‘பிஎம் கேர்ஸ் நிதி’க்கு 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இது குறித்து பேட் கம்மின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மக்களிடம் இருக்கும் அன்பும் கனிவும் நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நேரத்தில் ஐபிஎல் நடக்கலாமா, கூடாதா என விவாதங்கள் நடந்துவருகின்றன.
இந்த அரசுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கடுமையான ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
இந்தியாவுக்கு இது கடுமையான காலம்தான். இந்திய மருத்துவமனைகளுக்குப் பிராணவாயு வாங்குவதற்காக 50,000 டாலர்களைப் பிரதமர் கேர்ஸ்-க்கு நன்கொடையாக வழங்குகிறேன். ஐபிஎல் போட்டியில் விளையாடும் பிற வீரர்களும் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓரிரு மாதங்களாக கரோனாவின் தாக்கம் சற்று குறைந்து இயல்பு வாழ்க்கை மெள்ள மெள்ள திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து மீண்டும் கரோனா தனது கோரத் தாண்டவத்தைத் தொடங்கியுள்ளது.
தற்போது வேகமெடுத்துள்ள கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பிற நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் தற்போதுவரை பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வடநாடு முழுவதும் கரோனாவால் மிகப்பெரும் துயரத்தைச் சந்தித்துவருகிறது.