இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர், ஜகர்டாவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, டென்மார்கின் மியா ப்ளெச்ஃபெல்ட்டை உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 21-14 என்ற செட் கணக்கில் வென்ற சிந்து, இரண்டாவது செட்டில் 17-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-11 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.
இதன் மூலம், 21-14, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதேபோல, ஆடவர் இரண்டாம் சுற்றில் இந்திய வீரரான கிதாம்பி ஸ்ரீகாந்த் 17-21, 19-21 என்ற நேர்செட் கணக்கில் ஹாங்காங் அங்கஸ்லாங்கிடம் போராடி தோல்வி அடைந்தார்.