நடப்பு ஆண்டுக்கான இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜகர்தாவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாம் சுற்றில் உலக சாம்பியனும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி. சிந்து, ஜப்பானின் சயகா தக்காஹஷி (Sayaka Takahashi) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டாவது செட்டை 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் இரு வீராங்கனைகளும் தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடினார்.
இறுதியில், சிந்து 19-21 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இதன்மூலம், சிந்து 21-16, 16-21, 19-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
ஏற்கனவே இந்தத் தொடரில் சாய்னா நேவால், சாய் பிரனீத், கிதாம்பி ஸ்ரீகாந்த், சவுரப் வர்மா ஆகியோர் முதல் சுற்றோடு நடையைக் கட்டினர். இந்த நிலையில், இன்று சிந்து இரண்டாம் சுற்றில் தோல்வி அடைந்ததன் மூலம், இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பயணம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீரர்; ஒருவர் உயிரிழப்பு