தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடையே கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, கரோனா நிவாரண நிதிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அரசியல் பிரபலங்கள் முதல் அன்றாடங்காட்சி வரை பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திரையுலகினரும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, நடிகர் அஜித், சிவகார்த்திகேயன், சிவகுமார் குடும்பத்தினர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது அசுரன், வடசென்னை, விசாரணை உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் வெற்றிமாறன் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியும் 10 லட்சம் ரூபாயை கரோனா நிதிக்கு வழங்கியுள்ளார். நிவாரண நிதி வழங்கும் திரையுலகினரை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் 'கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து கரோனாவிலிருந்து மீள்வோம்' என்பதே, திரையுலகினரின் ஒருமித்தக் குரலாக உள்ளது.