பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11ஆவது நாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் இடம்பெற்ற மரணம் மாஸு... பாடலுடன் தொடங்கியது. குத்துப்பாடலைக் கேட்டவுடன், இதுவரை ஆடாத போட்டியாளர்கள்கூட கார்டன் ஏரியாவிற்கு வந்து நடனமாடினர்.
அக்கா- தம்பி பாச அலப்பறைகள்
பிரியங்கா, "என் அப்பா சாகும் 11 நாள்கள் முன்பு அவர் ரயிலில் இறந்துபோவதுபோல் கனவு வந்தது. என் அம்மாவிடம் சொன்னபோது, இறப்பதுபோல் கனவுகண்டால் அவர் உயிர்வாழ்வார் என அபிஷேக்கிடம் கூறினார். அதேபோல் சுனாமி வருவது எனக்கு முன்பே தெரிந்துவிட்டது" என்றார்.
இது எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல. என்ன இன்னும் யோசிக்கிறீங்க. அதுதாங்க, அழகிய தமிழ் மகன் படத்துல, விஜய்க்கு கெட்ட விஷயங்கள் எதாவது நடக்கப்போகுதுனா முன்னாடியே தெரியுமே அதேதான். உடனே அபிஷேக் அவரை சமாதானம் செய்கிறார்.
மூன்று ஆண்டுகள் பொய் சொன்னேன்
நேற்றைக்கான கதை சொல்லும் டாஸ்கில் முதல் நபராக வந்த நிரூப், "பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்தவுடனே பாலிடெக்னிக் சேர்ந்தேன். நிறைய விஷயம் எனக்கு அங்குதான் தெரிந்தது. எல்லாரும் என்னைவிட பெரியவர்கள். எனக்குப் பயமாக இருந்தது. அதனாலேயே எனக்குத் தமிழ் தெரியாது எனப் பொய் சொன்னேன். மூன்று ஆண்டுகள் அப்படியே நடித்தேன்.
எப்போதும் என்கூட இருப்பார்கள். ஆனால் என்னையே தவறாகப் பேசுவார்கள். அப்போதுதான் மனிதர்கள் குறித்து எனக்கு அதிகம் புரிந்தது. பிறகு படத்தில் நடிக்க ஆசை. ஆனால் யாருமே தெரியாது.
அப்போதுதான் என் முன்னாள் காதலி யாஷிகா மூலம் திரைத் துறையில் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் எனக்கு கிடைத்த வாய்ப்பால் பெருமைப்படுகிறேன். அதைச் சொல்வதில் எனக்கு அசிங்கம் இல்லை" என்றார்.
யாஷிகாவின் விபத்தால் அவரது தோழி பாவனி உயிரிழந்ததற்குப் பலரும் அவரைக் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் நிரூப், யாஷிகா பற்றி இவ்வாறு கூறியதன் மூலம் அவரது மதிப்பு கூடியது.
பாட்டி சாவித்ரியை நினைவுகூரும் அபிநய்
அடுத்த நபராகக் கதை சொல்லவந்த அபிநய், "ஜெமினி கணேசன், சாவித்திரியின் பேரன் நான். ராஜா, ராணிபோல் வாழ்ந்தவர்கள் சில காரணங்களால் பிரிந்தனர்.
எனக்குத் திருமணமாகி வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டேன். என் மனைவிதான் அனைத்தையும் பார்த்துக்கொண்டார். நான் வேலைக்குச் செல்லாமல் படித்தேன். சினிமா துறையில் சாதிப்பது என் கனவு. ஆனால் எங்குச் சென்று சாவித்ரி என் பாட்டி என்றாலும், என்னிடம் பேசுவார்கள்.
ஆனால் வாய்ப்பு கிடைக்காது. முயற்சிகள் தோல்வி அடைகின்றன. வாழ்க்கையில் செட்டிலாகவில்லை என்பதால் பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் குழந்தைகூட பெற்றுக்கொண்டோம். இந்த நிகழ்ச்சி மூலமாக வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் கலந்துகொண்டேன்” என்றார்.
அம்மாவால் அனுபவித்த கொடுமை
சிறுவயது முதல் அம்மாவின் கொடுமைகளை வரிசைப்படுத்தினார் நாடியா சங். இது குறித்து மனம் திறந்த அவர், "அம்மாவின் கொடுமைகளை அனுபவித்துவந்ததால். அவரை எதிர்ப்பவரைத் திருமணம் செய்ய முடிவு எடுத்தேன். என் கணவர் சைனீஸ். அவருடன் திருமணம் நடைபெற்றவுடன்தான் நாடியா சங் எனப் பெயர் மாற்றினேன். என் இயற்பெயர் அரு ஜெயலக்ஷ்மி.
எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். என் கணவரால் நான் மாடலிங் துறைக்குள் நுழைந்தேன். சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.
பாவனிக்கு அறிவுரை கூறும் அபிநய்
சமையல் டீமில் இருக்கும் பாவனி எப்போதும், வேலையை எடுத்துப்போட்டுச் செய்வதாகவும், இதுபோன்று செய்ய வேண்டாம் எனவும் அபிநய் அவருக்கு அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் 5: எனக்கு என் மகன் வேண்டும் குமுறிய தாய் - கண்ணீர் வெள்ளத்தில் பிக்பாஸ் வீடு