இந்திய கிரிக்கெட் போட்டியில் ஜாம்பவான்களாக வெற்றிக்கொடி நாட்டிய சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்தியாவின் உலகக் கோப்பை கனவை நினைவாக்கிய கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று படம் "83" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களாக இந்திய சினிமாவில் வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கையை படமாக்குவதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழரான முத்தையா முரளிதரன் 1972ஆம் ஆண்டு கண்டியில் பிறந்தார். இவர் 1992 முதல் 2011 வரை இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் 800 என்ற பெயரில் முத்தையா முரளிதரனின் பயோஃபிக் படம் உருவாக இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இலங்கை, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.