லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக வெளியான இத்திரைப்படத்தின் "குட்டி ஸ்டோரி", "வாத்தி கம்மிங்" உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீடு கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் டீசர் வெளியானது.
இந்த டீசரை இதுவரை 40 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பொங்கல் வெளியீடாக ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் பரவின. இந்தத் தகவலுக்கு மாஸ்டர் படக்குழுவினர் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும், அதன் பிறகே டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என படக்குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என செய்திகள் பரவிவரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.