சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இப்படம், உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனிடையே, மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதியன்று அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தியேட்டர் உரிமையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. படம் எதுவும் வெளியாகாத நிலையும் இருந்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் பலத்த எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்களும் பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக திரையரங்கு நோக்கி படையெடுத்தனர். இதன் மூலம் திரையரங்குகள் பழைய நிலையை அடைந்தன.
ஆனால் மாஸ்டர் ஓடிடியில் வெளியிட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படம் வெளியிடும்போதே 40 நாள்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிடப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று இரவுக்குள் முக்கிய முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.