73ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்றைய தினம் (ஜன. 27) கொண்டாடப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அரசால் மாநில பாடல் என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டபோது விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர்களிடம் செய்தியாளர்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என ஆர்பிஐ ஊழியர்கள் வாதிட்டிருக்கிறார்கள்.
தற்போது இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ரிசர்வ் வங்கி அலுவலர்களுக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா? அது சட்டமன்று; அறம். தமிழ்த்தாய் வாழ்த்தும் அப்படியே சட்டப்படியும் எழுந்து நிற்கலாம்; அறத்தின்படியும் எழுந்து நிற்கலாம். இரண்டையும் மறுத்தால் எப்படி? தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...?” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி!