சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின்படி, தான் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு தனது நண்பருடன் பல்கலைக் கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதி ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பின் படி, "பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி இரவு 7.45 மணியளவில் தனது ஆண் நண்பருடன் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்துள்ளார். நெடுஞ்சாலை ஆய்வகம் அருகே இருந்த போது ஒரு அடையாளம் தெரியாத நபர் தலையிட்டு ஆண் நண்பரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆண் நண்பர் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார்" என கூறப்பட்டுள்ளது.
"இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அந்த பெண்ணை தன்னோடு உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் தான் மாதவிடாயில் இருப்பதாக அந்த பெண் கூறியதும். வாய் மூலமாக உறவு கொள்ளுமாறு அந்த நபர் வற்புறுத்தியுள்ளார் எனவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஈடிவி பாரத்திடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும், புகார் அளித்தால் இதனை வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் கூறிய அங்க அடையாளங்களின்படியும், பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின், பாலியல் வன்கொடுமை தடுப்பு கமிட்டியிடம் (Protection of Sexual Harassment Committee) புகார் அளிக்கப்பட்டு, பின்னர் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும். இதன் பேரில் டிசம்பர் 24ம் தேதி மாலை 4 மணியளவில் வழக்குப்பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை (Rape) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளான 63(a), 64(i), 75(I)(ii)(iii) BNS ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு (Cr.No.3/2024) செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவியின் புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டூர்புரம் உதவி ஆணையர் வழிகாட்டுதலின்படி, ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள்புகார்க் குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என உயர்கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் பல்கலைக் கழக நிர்வாகம் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், பல்கலைக் கழக பதிவாளர் முனைவர். பிரகாஷ் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தினைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பை எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக தெரிவித்துக்கொள்கிறோம். குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்" எனவும் தெரிவித்துள்ளார்.
ஒருவர் கைது: இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஞானசேகரன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டூபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கோட்டூபுரம் அனைத்து மகளிர் காவல் துறையயினர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23:12.2024 -ந் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (CC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Jain Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 25, 2024
தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது…
தலைவர்கள் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்யதிக்குறிப்பில், மாநிலத் தலைநகரின் மையத்தில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகம், தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்திலேயே மாணவிக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது வெட்கக் கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது சட்டம் ஒழுங்கு மாநிலத்தில் சீர்குலைந்து விட்டதை காட்டுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) December 25, 2024
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள்,…
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,"உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.