சென்னை: ஃப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், "தங்கள் நிறுவனம் தயாரித்த "இரண்டாம் குத்து" என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை, ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், 4 கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியது.
இதில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கிய ராக்ஃபோர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை. அதற்குப் பதிலாக விநியோக உரிமையை திருப்பித்தருவதாகவும், படத்தின் லாபத்தில் 40 விழுக்காட்டைத் தரும்படியும், நஷ்டம் ஏற்பட்டால் மீதமுள்ள தொகையைத் திருப்பித் தருவதாகவும் ஒப்பந்தம் செய்தது.
ஒப்பந்தப்படி படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு கோடியே 40 லட்சத்து 42 ஆயிரத்து 732 ரூபாயை வழங்க வேண்டிய நிலையில், ராக் ஃபோர்ட் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில், "மன்மத லீலை" என்ற படம் உருவாகியுள்ளது.
இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக பத்திரிகை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வந்ததாகவும், அதனால் தங்களுக்குத் தர வேண்டிய தொகையை, 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல், ஆண்டுக்கு 24 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து, 2 கோடியே 2 லட்சத்து 21 ஆயிரத்து 570 ரூபாயை வழங்க வேண்டும். பணம் வழங்கும் வரை "மன்மதலீலை" படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்" எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர், 30 லட்சம் ரூபாயை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன், மன்மதலீலை படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு "இரண்டாம் குத்து" மற்றும் "மன்மதலீலை" படங்களின் விவகாரங்களை சமரசத் தீர்வு மைய நடுவரிடம் நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.