வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் உள்ள நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1954 - 55 ஆம் ஆண்டு 6ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் 70 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று (பிப்.9) சந்தித்தனர்.
குடும்பக் கூடல் வைர விழா என்ற பெயரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவருடன் பயின்ற பதினைந்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜ்யசபா முன்னாள் எம்பியுமான டி.ராஜா, முன்னாள் எம்எல்ஏ செ.கு.தமிழரசன், தற்போதைய குடியாத்தம் எம்எல்ஏ அமலு, குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
![தன்னுடன் படித்தவர்களுடன் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/tn-vlr-03-ex-studentsofgovernmentschool-familyreunionafter70yearsdiamondjubilee-visualscript-tn10074_10022025141055_1002f_1739176855_330.jpg)
மேலும், இதில் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கவுரப்படுத்தினர். மேலும், தான் படித்த பள்ளியில் உள்ள வகுப்பறைகளை விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் மற்றும் அவருடன் பயின்றவர்கள் பார்த்து தங்கள் நினைவுகளை பேசி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: GDP-யில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மகத்தானது! ஆனந்த நாகேஸ்வரன் பாராட்டு!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது; '' 70 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களாக சந்தித்துக் கொண்டோம்.. இப்பொழுது பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளு பேரன் பேத்திகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பழைய நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தங்களுடன் பயின்ற பலர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், அவர்களது குடும்பத்தாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து சிறப்பித்துள்ளனர்.
![விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் உரையாடல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/tn-vlr-03-ex-studentsofgovernmentschool-familyreunionafter70yearsdiamondjubilee-visualscript-tn10074_10022025141055_1002f_1739176855_514.jpg)
நான் பயின்ற பள்ளிக்கு ஏற்கனவே பல்வேறு பணிகள் செய்துள்ள நிலையில் மேலும் இந்த பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றுவேன். இந்த பள்ளியில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வேண்டும். கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும். ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு தங்கள் பல்கலைக்கழகத்தில் இலவசமாக இடம் அளித்து அவர்களை பல்வேறு பணியில் அமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தின் தரத்தை உயர்த்தியுள்ளோம். இது தற்போது விரிவடைந்து வருகிறது'' என விஐடி வேந்தர் ஜி. விஸ்வநாதன் தெரிவித்தார்.