உறியடி படத்தின் மூலம் யார் இந்த இளைஞர் என கோடம்பாக்கத்தையே பிரமிக்க வைத்தவர் விஜயகுமார். சிறிய பட்ஜெட்டில் 'உறியடி' படம் உருவாகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விஜயகுமார் இயக்கி நடித்திருந்த அப்படம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சாதிய அரசியலை மிக அழுத்தமாக சொன்ன படம் உறியடி.
அதேபோன்று 'உறியடி 2'-ல் மிக துணிச்சலாக சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தெள்ளத் தெளிவாக படம் பிடித்து காட்டினார். சமீபத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்துக்கும் வசனம் எழுதியிருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற "வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா" என்ற வசனம் ரசிகர்கள் மனதில் ஆழமாய் பதிந்தது.
அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட இவர் தற்போது புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'உறியடி' 2 படத்தில் உதவி இயக்குநராக இருந்த அப்பாஸ் இயக்கும் புதிய படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக விஜயகுமார் நடிக்க இருக்கிறார்.
ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழுநீள திரைப்படத் தயாரிப்பு இதுவாகும். படத்தின் முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கி விட்டன. மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் 65 படத்தின் இயக்குநர் பெயர் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்