கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கும் விதமாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 1.25 கோடி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அல்லு அர்ஜூன், கோவிட்-19 தொற்று உலகத்தை புயல் போல் தாக்கி, அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடுமையான சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சமூதாயத்துக்கு ஆற்றி வரும் பங்கு அளப்பறியது.
அவர்களிடமிருந்து பெற்ற ஈர்ப்பின் காரணமாக தன்னால் முடிந்த இந்த சிறிய உதவியை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். கரோனா நெருக்கடியை போக்கும் விதமாக ஆந்திரா தெலங்கானா, கேரளா மாநிலங்களுக்கு ரூ. 1.25 கோடி ரூபாய் மிகவும் பணிவுடன் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் சுகாதாரத்தை கடைபிடித்து, தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அல்லு அர்ஜூனின் உறவினர்கள், நடிகர்களுமான பவன் கல்யாண் மற்றும் ராம் சரண் ஆகியோர் அரசாங்கத்துக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கான நிதி அளித்த பின், தனது பங்களிப்பை அளித்துள்ளார் அல்லு அர்ஜூன். தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ் உள்ளிட்ட பலரும் கரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குவதற்கு நிதி வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடிக்கு 2 கோடி நிதியுதவி அளித்த பவர் ஸ்டார்!