’மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘டெடி’. இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிழக்கு ஐரோப்பா, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைப்பெற்றது.
இதனிடையே இப்படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில், 'டெடி பியர் பொம்மைக்கும் ஆர்யாவுக்கும் கதையில் ஒரு பெரிய இணைப்பிருக்கிறது. அதனால், நிறையப் பெயர்கள் யோசித்தோம். இறுதியில் பரிச்சயமான வார்த்தையான 'டெடி' என்ற பெயரையே வைக்கலாம் என முடிவு பண்ணினேன். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்தீர்கள் என்றால் அதற்கான காரணம் விளங்கிவிடும் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் கதை குறித்து ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. படத்தின் நாயகனோடு ஒரு கம்யூட்டர் சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் கூடவே இருக்கும். முழுமையாக அதை கிராஃபிக்ஸில் மட்டுமே பண்ண முடியும். அதுதான் டெடி படத்தின் இரண்டாவது முக்கிய கேரக்டர் ஆகும். இதை படத்தில் பார்க்கையில் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவம் கிடைக்கும்.
திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சாயிஷா ஜோடியை படத்தில் இணைப்பதற்கு முதலில் பயந்தேன். முன்பு 'காப்பான்' படத்தில் நடித்திருந்த அவர்கள் மீண்டும் சேர்ந்த நடிப்பார்களா என்ற சந்தேகத்தில்தான் அவர்களை நாடினேன். ஆனால் அவர்கள் கேட்டதும் இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டனர். சாயிஷாவின் கேரக்டர் ரொம்பவே முக்கியமானது. 'மதராசப்பட்டினம்' படத்துக்குப் பிறகு ஆர்யாக்கு ஒரு பெரிய பட்ஜெட் படமாக இது இருக்கும்.
ஐரோப்பா மிகவும் பழமையான நாடு. ஒரு காலத்தில் அதுதான் ரஷ்யாவாக இருந்தது. ரஷ்ய மக்கள் இந்தி படங்கள் மீது ஆர்வமாக இருந்துள்ளார்கள். இதனால் ஐரோப்யி நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டபோது, சாயிஷா திலீப் குமாரின் பேத்தி என்பதைத் தெரிந்துக் கொண்டவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து 'திலீப் குமார்', 'திலீப் குமார்' என்று சொல்லிக் கொண்டே இருந்தனர். மேலும், அவர்கள் கருப்பு - வெள்ளைக் காலத்து இந்திப் படங்கள் குறித்து பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.
அந்த நாட்டில் சேரி மாதிரியான பகுதியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு ஒரு பாட்டி, ஆர்யாவிடம் டிவிடியை எடுத்து காட்டி 'இது நீ தானே' என்று கேட்டார். இந்தியப் படங்கள் மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மார்ச் மாதம் வரை கிராபிக்ஸ் வேலை நடைபெற உள்ளது' என்றார்.