அண்ணாவின் திரைக்கதையில் உதித்த ‘ஓர் இரவு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சுகுமாரி. இதுதான் அவருக்கு முதல் படம். இதைத் தொடர்ந்து தமிழில் படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என அனைவரது படங்களிலும் வலம்வந்தார். இவர் மலையாளப் படங்களிலும் நல்ல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மலையாளப் படவுலகில், எந்த இயக்குநர் படமெடுத்தாலும் எந்த நடிகர் நடித்தாலும் எந்தத் தயாரிப்பாளர் நடித்தாலும், முதலில் புக்செய்வது சுகுமாரியைத்தான்.
நம்மூரில் காமெடியாகவும், குணச்சித்திரமாகவும் பன்முகங்களுடன் நடித்த மனோரமா, எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருந்தியதுபோல், மலையாளத்தில் சுகுமாரியைச் சொல்லுவார்கள். அதனால்தான், ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று அழைப்பார்கள்.
தமிழ், மலையாளப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குநர் பீம்சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். அவரது மரணத்துக்குப் பின் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்தார். பின்னர் நடிக்கத் தொடங்கிய சுகுமாரி, 'பொன்னர் சங்கர்', 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடைசியாக வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார்.
எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, விஜய், தனுஷ் வரைக்கும் என உச்ச நட்சத்திரங்களுடன் ஆறு மொழிகளில் இரண்டாயிரத்து 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் சுகுமாரி.
அன்பையும் உருக உருகச் சொல்லும்... அப்படியொரு வசீகரக் குரல். தனித்துவமான குரல் இவருக்கு உண்டு. இவர் 2013ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி காலமானார். 1940ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி பிறந்த சுகுமாரிக்கு, இன்று பிறந்தநாள்.