சென்னை: தென்னிந்திய கலை, கலாசாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
பிரிட்ஜ் அகாதமி ஊடகக் கல்வி மற்றும் நுண்கலை கல்லூரியின் சார்பாக சென்னையில் பிரிட்ஜ் தேசிய மாநாடு நடைபெற்றது. சென்னை குமார ராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இலங்கை, மலேசியா உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினார்கள்.
கருத்தரங்கம், விவாத மேடை, ஓவியக் கண்காட்சி, கர்நாடக இசை, தொன்மையான இசைக் கருவிகளுக்கான கண்காட்சி, பரதநாட்டிய கலைக்கான சிறப்புக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்வில் மூத்த கடம் இசை மேதை பத்மபூஷண் விக்குவிநாயக்ராம், பரதநாட்டிய மேதை நிருத்ய சூடாமணி, சி.வி. சந்திரசேகரன், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:
உலக அளவில் இந்திய நுண்கலைகள் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவை. மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசைவிழா, உலகளவில் புகழ்பெற்றது. அந்தத் தருணத்தில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் நான் கலந்துகொள்வதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.
வடஇந்திய, ஏனைய கலைகளுடன் ஒப்பிடும்போது, தென்னிந்திய கலைகள், கலாசாரம் கலப்படமற்ற பாரம்பரியம் கொண்டதாக உள்ளது.
நுண்கலைகளின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றிவரும் பிரிட்ஜ் அகாதமியின் சேவையை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.