சினிமா நடிகர்கள் நடித்துக்கொண்டிருக்கும்பொழுதே அரசியலுக்கு வருவது சகஜமாகிவிட்டது. நடிகர்களை காட்டிலும் நடிகைகளும் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பழம்பெரும் கன்னட நடிகர் அம்பரீஷ் மனைவி சுமலதா நடக்க இருக்கின்ற மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகரும் வீட்டுத்துறை அமைச்சருமான அம்பரீஷ் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி மாரைடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு பின்னர் நடிகையும் அம்பரீஷ் மனைவியுமான சுமலதா வருகின்ற மக்களவை தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பில் இவருக்கு ஆதரவாக கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் மற்றும் தர்சனும் சேர்ந்து பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவித்தது கன்னட திரை உலகினரையே பிரம்மிக்க வைத்துள்ளது.
கன்னட சினிமாவில் நடிகர் யாஷ் மற்றும் தர்ஷனும் எதிர் எதிர் துருவங்ளாக இருந்து வருகின்றனர். எனவே இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்த பெருமை நடிகர் அம்பரீஷ்க்கே சேரும்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் கூறியதாவது, 'நடிகர் தர்ஷனும் நானும் சினிமாவில்தான் போட்டியாளராக இருக்கிறோம். மக்களவை தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் சுமலதா அக்காவிற்காக இருவரும்சேர்ந்து பிரச்சாரம் செய்வோம். இந்த தேர்தலில் அவர்களை வெற்றி பெற வைப்பதே தங்களது குறிக்கோளாக இருக்கும்.
மேலும், தர்ஷன் அந்த வீட்டின் மூத்த மகன் என்றால் நான் இளைய மகன். அம்பரீஷ் தங்கள் மீது வைத்த அன்பை நாங்கள் திருப்பி செலுத்த அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதை தவறவிடமாட்டோம்' என்று கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் கூறினார்.