வாஷிங்டன்: கரோனா வைரஸ் தொற்று பயத்தால் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாலியல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட ஹாலிவுட் பாடகர் ஆர் கெல்லி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று வயதானவர்களைக் குறிவைத்து தாக்குவதுடன் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. 53 வயதாகும் பாடகர் கெல்லி மீது கரோனா தொற்று தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று பாடகரின் தரப்பு வழக்குரைஞர்கள் சிகாகோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
மேலும், அவர் சிகாகோ மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு கிருமி நாசினி, சோப் ஆகியவற்றின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பதுடன், ஒரு அறையில் இரு கைதிகளை அடைக்கும்போக்கு நிலவிவருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாக இருந்தாலும் இதனைச் செயல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பார்வையாளர்களுக்கான டாய்லெட்டில் சோப், காகித துண்டுகள் இல்லாமல் இருப்பது சிறைக்கு கைதிகளைப் பார்க்கவருபவர்கள் கைகழுவாமல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எந்தக் குற்றங்கள் புரிந்திருந்தாலும் பிரதிவாதியின் உயிருக்கு முக்கியத்துவம் தருவதை நீதிமன்றங்கள் நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவருகின்றன என்று பாடகர் சார்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மனு தொடர்பாக உத்தரவு எதுவும் வராத நிலையில், சிறையில் இருக்குமாறு பாடகர் கெல்லியை வழக்குரைஞர்கள் வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு பாலியல் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவரும் கெல்லி மீதான வழக்குகளின் விசாரணை வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதனிடையே தற்போது கரோனா அச்சத்தால் விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
இவரைப்போல் பல்வேறு குற்றங்களுக்காகச் சிறையிலிருந்து வரும் பிரபலங்கள் சிலரும் விடுவிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.