ஓ... 'சூப்பர் ஸ்டார்' படப்பிடிப்பு தள்ளி போக இதுதான் காரணமா..! - அனிருத்
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கலன்று வெளியான படம் 'பேட்ட'. விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பணிகளால் படப்பிடிப்பு செலவிற்காக பணம் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.