சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘புஷ்பா’. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.
இதனை ஒட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், அல்லு அர்ஜுன், கலைப்புலி தாணு, தேவிஶ்ரீ பிரசாத், ஆர்.பி. சௌத்ரி, மதன் கார்க்கி, இயக்குநர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மதன் கார்க்கி, “புஷ்பா படத்தின் இவ்விழாவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்திற்கு வசனம் எழுத அன்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்துக்கொண்டேன். அடர்ந்த காட்டுப்பகுதியில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். அல்லு அர்ஜுனுக்கு நிறைய விருதுகளை இப்படம் பெற்றுத்தரும். செம்மரக்கடத்தலைப் பற்றிய படம்தான் இது. தமிழர்களுக்கு எதிராகவும் அரசியல் சார்பாகவும் இதில் எதுவும் இல்லை” என்றார்.
பின்னர் பேசிய தேவிஶ்ரீ பிரசாத், "அல்லு அர்ஜூன் நிச்சயம் தமிழில் நடிக்க வேண்டும். மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள். இது தமிழ் ரசிகர்களுக்கான படம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அல்லு அர்ஜுன், “தமிழில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கிடைக்க தேவிஶ்ரீ பிரசாத்தின் இசைதான் காரணம். நான் பிறந்த ஊரில் எனது படத்திற்கு வரவேற்பு கிடைத்தால்தான் எனக்குப் பெருமை. விரைவில் தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பேன்” என்றார்.
இதனையடுத்து செய்தியாளர் கேள்விக்குப் பதில் அளித்த அல்லு அர்ஜுன், “படத்தை எடுத்துவிட்டு நிம்மதியாக உள்ளேன். எங்கள் வேலை முடிந்துவிட்டது. இனி உங்கள் கையில்தான் உள்ளது. ஐகான் ஸ்டார் என்ற பட்டம் இயக்குநர் அளித்ததுதான்.
‘ஓ சொல்றியா’ பாடலின் சொல்லப்பட்டது உண்மைதானே. புஷ்பா என்ற ஒருவரின் கதைதான் இது. ரசிகர்கள் பார்க்க முடியாத நிலைதான் ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் ரசிகர்களைச் சந்திப்பேன்” என்றார்.
இதையும் படிங்க: வெளியானது வலிமை மேக்கிங் காணொலி வெளியீட்டுத் தேதி