புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்துவருகிறது. இதையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாபி பாடகரான திலிஜித் தோசான்ஜின் பதிவைப் பகிர்ந்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, "நமது விவசாயிகள், இந்தியாவின் உணவுப் பாதுகாவலர்கள். அவர்களது அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பூர்த்திசெய்ய வேண்டும். வளர்ந்துவரும் ஜனநாயக நாடான நாம் இந்தப் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள அவரை, ட்விட்டர்வாசிகள் சிலர் கலாய்த்துவருகின்றனர். அமெரிக்காவில் இருந்துகொண்டு சுய விளம்பரத்திற்காக பிரியங்கா இப்படி பேசியுள்ளதாக ட்விட்டர்வாசி ஒருவர் விமர்சனம் முன்வைத்துள்ளார்.