தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் கடந்தாலும், இன்றும் பலரது பேவரைட் போட்டியாளராக ஓவியா உள்ளார். இவர் அந்நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக இருந்த ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ், அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகிவந்தனர்.
இதையடுத்து சமீபத்தில் ஆரவ் மற்றும் ரஹீ இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் அதில் ஓவியா பங்கேற்கவில்லை.
இதற்கிடையில் ஓவியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் ஓவியாவிடம், ஏன் ஆரவ் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஓவியா, "ஆரவ் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது திருமணத்தின்போது நான் கேரளாவில் இருந்ததால்தான், செல்ல முடியவில்லை. எங்களுக்குள் இருந்தது, முடிந்துவிட்டது. திரும்பவும் அதைப் பற்றி யாரும் கேட்காதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.