பார்த்திபன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. படக்காட்சிகள் முழுவதும் பார்த்திபனைச் சுற்றியே நகரும் வித்தியாசமான இந்தத் திரைப்படம், பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றது. அகாதமி விருதுகள், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
பொருளாதார ரீதியாக வெற்றிபெறாதபோதும், சர்வதேச திரை சமூகத்தை தமிழ் சினிமாவை உற்று நோக்கச் செய்தது.
இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படமானது இந்தோனேசிய பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிடி ஃபால்கன் நவீன் தயாரிக்கிறார். இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.
அமிதாப் பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
பார்த்திபன் தனது லட்சியத் திரைப்படமான ‘இரவின் நிழல்’ படத்தில் பணிபுரிந்துவருகிறார். இது ஒரே ஷாட்டில் உருவாக்கப்படும் திரைப்படமாக உலக கவனத்தை ஈர்க்கவுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது. திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார் பார்த்திபன்.
இதையும் படிங்க: கேரள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்