தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளராகக் கருதப்படும் பாலு மகேந்திரா, 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வந்தார். ஒருநாள் ராம் சுப்ரமணியம் எனும் இளைஞர் பாலு மகேந்திராவைச் சந்தித்து, தனது கதையை சொல்லிவிட்டுச் செல்கிறார். அப்போது பாலு மகேந்திராவிடம் அசிஸ்டென்டாகப் பணிபுரிந்த இயக்குநர் வெற்றிமாறன் அவரைச் சந்திக்க வருகிறார்.
'வெற்றி நான் ஒருத்தர் படத்துக்கு கேமரா ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன்டா' என பாலு மகேந்திரா கூறியிருக்கிறார். இதைக் கேட்ட வெற்றிமாறனுக்கு ஆச்சர்யம், 'யாரு அது. நம்ம குருநாதரையே இம்ப்ரெஸ் பண்ற மாதிரி கதை சொன்னது' என்று.
'ராம் சுப்ரமணியம்னு ஒரு பையன் வந்து கதை சொன்னான். அவனுக்கு என்ன வேணுங்குறதுல தெளிவா இருக்கான். நான் கேமரா ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன்' எனப் பாலு மகேந்திரா கூறியிருக்கிறார்.
2007ஆம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' திரைப்படம்தான் பாலு மகேந்திராவை ஒளிப்பதிவு செய்யத் தூண்டிய அந்தக் கதை. அந்த இளைஞர் தான், தற்போதைய இயக்குநர் ராம்.
உலக மயமாக்கலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’கற்றது தமிழ்' திரைப்படத்தின் காதல் போர்ஷன்கள் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்.
'கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்...
உரையாடல் தீர்ந்தாலும்... உன் மௌனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி, பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா? ..'
இப்படி பிரபாகர் - ஆனந்தியின் காதல் ஒருபுறம் பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது. 'நிஜமாதான் சொல்றீயா' என கள்ளங்கபடமில்லாமல் கேட்கும் ஆனந்தியை, தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது.
மறுபுறம், 'ஒரு கூலிங் கிளாஸை அணிவதற்காக நீங்கள் கொலை செய்யப்படலாம். உடம்பு முழுவதும் வளர்ந்தால் அது வளர்ச்சி. கால் மட்டும் வளர்ந்தா, அது யானைக்கால் வியாதி' என உலக மயமாக்கல் பற்றி பேசி மிரட்டியிருப்பார்.
மேலும் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை காட்சிப்படுத்தியிருப்பார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் ஒரு காவல்துறை அதிகாரியால், ஒரு தமிழ் ஆசிரியரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்ற விதத்திலும் இந்தக் கதையை அணுக முடியும்.
கடந்து வருவேன் கண்மணி…பனியினுள் நனைந்த உருவம் பார்க்கிறேன்
எளிமையான கதையில் தங்களுக்கான அரசியலைப் பேசும் ஈரான் இயக்குநர்களின் படங்களைப் பார்த்து தமிழ் சினிமா விமர்சகர்கள் பெரிதும் சிலாகிப்பதைப் பார்த்திருப்போம். அப்படி ஒரு கதையம்சத்துடன் உருவானதுதான் ராமின் 'தங்க மீன்கள்'.
வோடஃபோன் நாய் (pug dog) வாங்கி வளர்க்க நினைக்கும் மகளின் ஆசையை கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தந்தை எப்படி நிறைவேற்றுகிறான் என்பதே 'தங்க மீன்கள்' படத்தின் ஒன்லைன். இதில் தனியார் பள்ளிகளில் நிகழும் அநியாயங்கள் குறித்தும், குழந்தை வளர்ப்பு, உளவியல் சிக்கல் என பலப் பிரச்னைகள் குறித்தும் பேசியிருப்பார்.
’தங்க மீன்கள்' ட்ரெய்லரைப் பார்த்த பாலு மகேந்திரா, 'ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவன். ராமுடைய சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், ராமுடைய சினிமாவில் சினிமா மட்டுமல்ல, ஒரு கவித்துவம் இருக்கும். ஒரு அற்புதமான தமிழ் இருக்கும்' எனக் குறிப்பிட்டிருப்பார்.
இந்த இரு படங்களுக்கும் தீவிர ரசிகர்கள் ஏராளம். அதன்பிறகு ராம் இயக்கிய தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களால் கொண்டாடப்படும் இயக்குநர்கள் சிலர் பொருளாதாரப் பிரச்னையால் திரைத்துறையை விட்டு காணாமல் போவார்கள். 'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கிய ருத்ரய்யா, தனது இரண்டாவது படத்துடன் காணாமல் போனார். ஆனால், அவரை தமிழ் சினிமா ரசிகர்களில் பலரும் அந்த ஒற்றை படத்துக்காக இன்றும் கொண்டாடுகின்றனர்.
ராம் இயக்கிய திரைப்படங்கள் மீது பலருக்கும் விமர்சனம் இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த முக்கியமான கதை சொல்லி ராம். பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவ்வப்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ராமின் பொருளாதார நிலை குறித்து 'பேரன்பு' படத்துக்கான விழாவில் இயக்குநர் கரு. பழனியப்பன், 'இந்த ஊர்ல அயோக்கியன், ரவுடி எல்லாம் கார், பங்களா வச்சுருக்கும்போது இவன்கிட்ட (ராம்) இருக்க வேணாமா?.. ராமுக்குத் தேவை பெரும் பணம், அப்பதான் அவன் தொடர்ந்து திரைப்படங்கள இயக்க முடியும். இல்லைனா அவன் நடிக்க வந்துருவான்' எனப் பேசியிருப்பார்.
ராம் போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து இயங்க பொது மக்களின் ஆதரவு அவசியம். இன்று இயக்குநர் ராமின் 45ஆவது பிறந்த நாள். பேரன்புடன் கூடிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராம்..!
இதையும் வாசிங்க: #HappyBirthdayVetrimaaran: வெல்வோமே... வீழாமல்...