சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிபியின் வீட்டில் அவரது உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சினிமா பிரபலங்கள் பலரும் காணொலி வாயிலாகவும், சமூகவலைதளத்திலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி வீட்டில் இருந்தபடியே எஸ்பிபியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாலு சார் இசைக்குழுவில் பல ஆண்டுகள் நான் பலகுரல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன். தொடர்ந்து ஒரு மாதம் வெளிநாடுகளில் என்னை அழைத்துச் சென்று அவரது கச்சேரியில் பலகுரல் நிகழ்ச்சி செய்ய வைத்தார். என் திறமைகளை அவர் மூலம் தான் எல்லோரும் தெரிந்து கொண்டார்கள்.
ஆரம்ப காலத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர். எனது மூத்த சகோதரர் என்று கூட சொல்லலாம். அவரது மறைவால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறேன், என் துயரத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: பாடும் வானம்பாடி மறைந்தது - அரசியல் தலைவர்கள் இரங்கல்!