உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக அச்சு இயந்திரத்தைக் கூறுவார்கள். பல்வேறு பரிணாமங்களுக்கும், வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் அந்தக் கண்டுபிடிப்பு தான் முக்கிய காரணமாக இருந்தது. அதற்கு சற்றும் குறையில்லாதொரு கண்டுபிடிப்பாகத் திரைக்கலையையின் வருகையைக் கூறலாம். திரைக்கலை, பல பரிணாமங்களைக் கடந்த பல்வேறு காலகட்டங்களில் அடைந்து வந்தது.
பல்வேறு திரைக்கலைஞர்கள், அதில் பல்வேறு கோணங்களையும், அதனின் பலத்தரப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் அழகியல்களை ரசிகர்களுக்குத் திரையிட்டனர். பல்வேறு ஜொனர்களில்(Genres) திரைப்படங்கள் உலகலாவியக் கலைஞர்களால் படைக்கப்பட்டன.
எது சரியான ஜனரஞ்சகம்?
பொதுவாக கலைகளைப் பற்றியக் கலந்துரையாடல்களில் இந்த வார்த்தை அடிக்கடி இடம்பெறக்காணலாம். அது தான் ‘ஜனரஞ்சகம்’, ஏன் ஒரு கலை படைப்பை ஜனரஞ்சகப் படைப்பாக உருவாக்க வேண்டும்? ஜனரஞ்சக சினிமாவின் தன்மைகள் என்ன?, ஜனரஞ்சகம் எனும் பார்வையில் உள்ள சிக்கல்கள் என்ன?
ஒரு கலைப்படைப்பில் ரசிகர்களின் மனநிலை, புரிதல் மற்றும் அவர்களின் பார்வையை வெகுவாகக் கருத்தில் கொண்டு, எடுக்கப்படுவதை ஜனரஞ்சகப் படைப்பு என்று கூறுவர். பலர் ஜனரஞ்சகம் என்பது மக்களின் பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு மட்டும் எடுக்கப்படும் படைப்புகள் என்று தவறானப் புரிதலுக்குள்ளாகிவிடுகின்றனர்.
மக்களின் புரிதலை மலிவாய் எண்ணுவது சரியான கலைஞனின் செயல்பாடு அல்ல. மக்களை அவனை விட புத்திசாலிகளாக எண்ணித் தான் அவன் படைப்புகளின் அணுகுமுறைகள் இருந்திடவேண்டும். ஜனரஞ்சகத் தன்மை என்பது மக்களிடம் எளியமுறையில் படைப்பை சேர்க்க கையாளப்பட வேண்டுமே தவிற வெறும் பொழுதுபோக்கிற்காக மலிவாகக் கையாளப்படுவதாக இருந்துவிடக் கூடாது.
சமீபத்தில் தமிழில் வந்த சிறந்த ஜனரஞ்சக சினிமாவாக ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைக் கூறலாம். இயக்குநர் தன் கருத்துகளை மக்களுக்கு புரியும் வடிவில் எளிதாகவும் அதே சமயத்தில் ஆங்காங்கே கலை நுணுக்கக்கூறுகளையும் கையாண்டிருப்பார். பொது மக்களால் பெரும் வரவேற்பை இத்திரைப்படம் பெற்றது.
ஆஸ்கார் விருதின் தேர்வு பட்டியல் வரைக் கூட சென்றது. ஆனால், இத்திரைப்படத்தை அதீதமாக கொண்டாடுவதாகப் பல சினிமா விமர்சகர்கள், மற்றும் மாற்று சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கருத்துகள் எழுந்தது. ஆஸ்கார் விருதிற்கு அனுப்ப இத்திரைப்படம் தகுதியானது அல்ல என்றும் பல சினிமா விமர்சகர்கள்,மற்றும் மாற்று சினிமா ரசிகர்கள் வட்டாரங்களில் முணுமுனுத்தனர்.
ஆனால், ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் விருது பட்டியல் வரை போனது மக்களின் ரசனை மற்றும் திரைப்படங்களைப் பற்றிய பார்வையை நிச்சயம் ஒரு சிரிய சதவீத அளவிற்காவது மேம்படுத்தும் என்று நம்பலாம்.
ஒரு ஜனரஞ்சக சினிமா, மக்களின் ரசனையை அவர்கள் விரும்பும் முறையில் மேம்படுத்துவதாக இருத்தல் வேண்டும். அதைத்தாண்டி, இன்றளவில் வர்த்தகமயமாகியிருக்கும் திரைக்கலை மத்தியில் இம்மாதிரியான சமரசங்களின் மூலம் மட்டுமே நல்ல படைப்புகளை பெரும்வாரியான மக்களிடம் சேர்க்க முடியும்.
ஜனரஞ்சகம் எனும் சாபம்!
பல சுயாதீனத் திரைக்கலைஞர்களுக்கு இந்த ஜனரஞ்சகம் எனும் வார்த்தையின் மேல் பெரும் உடன்பாடு இருக்காது. இன்னும் பல பேருக்கு அந்த வார்த்தையின் மேல் பெரும் கோவம் கூட இருக்கலாம். ஒரு வகையில் பார்த்தால், பொது ஜனங்களின் பார்வைகளில் இருந்து வேறுபடுபவன் தானே கலைஞன். அவனின் தனித்திருக்கும் சிந்தனை என்பது மிக முக்கியம் அல்லவா? அதை சமரசம் செய்துகொள்வது அவனின் படைப்பைக் குலைப்பதாகத் தானே ஆகும்..?
பின் நவீனத்துவம்(Post modernism), சர்ரியலிசம்(Surrealism), மேஜிக்கல் ரியலிசம்(Magical realism), 'Pure art cinema', 'Exploitation', 'Parody' போன்ற சிந்தனைமுறைகளை திரைப்படங்களில் அணுகுவது என்பது பல்வேறு திரைக்கலைஞர்களால் கையாளப்பட்டு வருகிறது. இப்படி திரைக்கலையில் புதிய பரிணாமத்தை அடைய நினைக்கும் திரைக்கலைஞர்களுக்கு, இப்படி திரைப்படத்தை ஜனரஞ்சகமாக எடுத்தால் தான் பொதுத் திரையில் தங்கள் படைப்பை வெளியிட முடியும் என்பது கொடுமையான நெருக்கடியாகத் தான் பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட மாற்றுச் சிந்தனைப் படைப்பாளிகளுக்கு இந்த ‘ஜனரஞ்சகம்’ எனும் வார்த்தை பெரும் சாபக்கேடாகவே உள்ளது. ஒரு கலை படைப்பு கண்டிப்பாக எல்லா தரப்பினருக்கும் திருப்தியளித்தே ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. பொதுச்சிந்தனைகளைத் தாண்டிய படைப்புகளும் பொதுத் திரையில் வெளியிடப்பட வேண்டும். அதற்கான சூழ்நிலை கலைத்துறையில் ஏற்பட வேண்டும். பல்வேறு சுயாதீனக் கலைஞர்களின் படைப்புகள் பொது வெளியில் திரையிடப்பட வேண்டும்.
உலகசினிமாக்களின் மாஸ்டர்களாகக் கொண்டாடப்படும் தர்க்வோஸ்கி, ஜொடொரோஸ்கி, கேஸ்பர் நோ, கிம் கி டுக், அகிரா குரொசவா போன்ற படைப்பாளிகள் எவரும் ஜனரஞ்சகத் தன்மையை பெரிதாகத் தங்களின் படங்களில் கருதியதில்லை. ஆகையால் தான் அவர்களின் படைப்புகளும், சிந்தனைகளும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இது போன்ற மாற்று சிந்தனைகள் தமிழ் சினிமாக்களிலும் வரத்தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முதல் மேஜிக்கல் ரியலிசத் திரைப்படம் நடிகர் நாசர் நடித்த 1999இல் வெளியான ’முகம்’ என்ற திரைப்படம் தான். அதற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து ஷியாம் சுந்தர் மற்றும் கௌதம் லியோனல் இயக்கத்தில் வருகிற மார்ச் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘குதிரை வால்’ என்கிற திரைப்படம் தான். இப்படிப்பட்ட மாறுபட்ட ஜோனர்கள் எக்கச்சக்கமாக திரைக்கலையில் உள்ளது. இவை அனைத்தும் பொதுத் திரையில் வெளிவந்து மக்களின் திரைரசனையை மேம்படுத்த வேண்டும்.
ஜனரஞ்சகத்தன்மை என்பதை சரியாக புரிந்துகொள்ளுதல் அவசியம். அந்தத் தன்மையை சமரசம் செய்துகொள்ள விருப்பமில்லாத கலைஞர்களையும் பிரித்துப்பார்க்காமல் அனைத்தையும் மக்களின் கருத்திற்கு விடுவதே சரியான முறையாக இருக்கும். திரைரசனைக்கு வரைமுறையில்லை, தனிஅறிவாற்றல் எதுவும் தேவையில்லை, ரசிக்கும் குணமே போதும்.
ரசனைக்கும் உண்டோத் தனித் தகுதி?
இதையும் படிங்க: Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!