2021ஆம் ஆண்டின் கடைசி மாதத்தை முன்னிட்டு, சமீபத்தில் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரையரங்கம், ஓடிடியில் எத்தனை படங்கள் வெளியாகின்றன என்பதைப் பார்ப்போம்.
திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
83 திரைப்படம்
1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற புரொண்டன்ஷியல் உலகக்கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக வென்று சாதனை படைத்தது.
அப்பயணத்தை அடிப்படையாக வைத்து 83 படம் உருவாகியுள்ளது. ரன்வீர் சிங்கும், அவரது மனைவி ரோமி தேவ்-ஆக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாகிறது.
ராக்கி
'சாணிக்காயிதம்' பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள 'ராக்கி' படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 23ஆம் திரையரங்கங்களில் வெளியாவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
ரைட்டர்
பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரைட்டர்’. இத்திரைப்படத்தைப் புகழ்பெற்ற இயக்குநர் பா. இரஞ்சித் தயாரித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய 'ரைட்டர்' நாளை வெளியாகவுள்ளது.
தள்ளிப் போகாதே
நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'தள்ளிப் போகாதே'. 'இவன் தந்திரன்', 'பூமராங்' ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, முழுக்க முழுக்க காதல் நகைச்சுவையுடன் இப்படத்தை இயக்கியுள்ளார். தள்ளிப் போகாதே நாளை வெளியாகவுள்ளது.
ஷியாம் சிங்கா ராய்
நானி நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஷியாம் சிங்கா ராய்'. ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ள இதில் நானி இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ஆனந்தம் விளையாடும் வீடு
'ஒரு கல்லூரியின் கதை' பட இயக்குநர் நந்தா பெரியசாமி, கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கியுள்ள படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
ஓடிடியில் வெளியாகும் படங்கள்
மின்னல் முரளி
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் டொவினோ தாமஸ் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். இவர் தற்போது பேஸில் ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மின்னல் முரளி' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் நாளை வெளியாகிறது.
பிள்ட் மணி
இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள Blood Money படத்தில் பிரியா பவானி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
அட்ராங்கி ரே
பாலிவுட்டில் தனுஷ், அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அட்ராங்கி ரே'. இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கிய இப்படம் நாளை டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் இந்தி, தமிழில் வெளியாகிறது.
இதையும் படிங்க: சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் CIFF