நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் சேதுராமன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் 'வாலிப ராஜா', 'சக்க போடு போடு ராஜா' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தோல் மருத்துவரான சேதுராமன், கடந்த மார்ச் மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பு, தமிழ் சினிமா ரசிகர்கள், அவரது திரைத்துறை, மருத்துவத் துறை நண்பர்கள் எனப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சென்ற ஆகஸ்ட் நான்காம் தேதி சேதுராமன்- உமையாள் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே சஹானா என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தனது கணவர் சேதுராமன் குறித்தும், தங்களது குழந்தை குறித்தும் உமையாள், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் புகைப்படம் எடுக்க விரும்புவேன். நீங்கள் போஸ் கொடுக்க விரும்புவீர்கள். நான் இனிப்புகள் வேண்டாம் என்று சொல்லுவேன். நீங்கள் ஒருபோதும் இனிப்புகளை வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள். ஒரு நிமிடத்தில் உணவை நான் வெறுத்து விடுவேன். ஆனால் நீங்கள் அணு அணுவாய் ருசித்து சாப்பிடுவீர்கள்.
நான் உன்னை நேசிக்கிறேன். நீ சஹானாவை நேசிப்பாய். சேது, நீங்கள் சிறிய சேது (குழந்தை) ஆகிவிட்டீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.