தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல்லாண்டு போராட்டங்களுக்கு பிறகு பாலாவின் சேது படத்தின் மூலம் தனக்கென முகவரியை சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டார். பின்பு காசி, பிதாமகன், தெய்வதிருமகள் போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும், சாமி, தில், தூள், சாமி, ஐ, ஸ்கெட்ச், 10 எண்றதுக்குள்ள, பீமா, இருமுகன் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களில் ரசிகனின் நாயகனாவும் வெரைட்டி காட்டி வருகிறார்.
விக்ரம் நடிப்பில் மெகா ஹிட் அடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி தோல்வியைத் தழுவியது. அதனால் கட்டாயமாக ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்று கடாரம் கொண்டான் என்னும் படத்தில் முழு ஆர்வம் காட்டி வருகிறார். இப்படத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தயாரிக்கிறார். டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்கிறார். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்குகிறார். விக்ரமுக்கு ஜோடியாக முதல் முறையாக அக்ஷராஹாசன் நடிக்கிறார். படத்தின் முழு படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது.
கடாரம் கொண்டான் படத்தின் முரட்டுத்தனமான பர்ஸ்ட்லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சால்ட் அண்ட் பெப்பர் லுக், டாட் டூ என விக்ரம் ஆளே மாறிப்போயிருந்தார். இந்நிலையில், கடாரம் கொண்டான் படத்தின் சிங்கிள் ட்ராக்கை உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் அதிரடியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.