நாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர், நகைச்சுவையாளர் என்று பன்முகத் திறன் கொண்ட மாயா கிருஷ்ணனை கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் 'மாயா அன்லீஷ்ட்'. மாயா கிருஷ்ணன் 'மகளிர் மட்டும்',' 2.0' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பெண் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படங்கள் இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. ஆக்ஷன் காட்சிகளை மையமாகக்கொண்டு உருவாகும் முதல் இந்திய குறும்படம் இது. 'தி பேமிலி மேன்', சர்வதேச அளவில் புகழ் பெற்ற 'ஃப்யூரி', கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்', 'ஜோஸ்வா- இமைபோல் காக்க' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சண்டைக் கலைஞரான யானிக் பென் வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இப்படம் முழுவதும் பாரிஸில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
யானிக் பென், மாயா இருவரும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். சண்டைக் காட்சிகளில் மாயாவின் திறமைகளைக் கண்டு வியந்த யானிக், அவரது முழுத் திறமை வெளிப்படும் வகையில் ஒரு குறும்படத்தை உருவாக்க முனைந்திருக்கிறார். மார்க் டேவிட் ஆக்ஷன் டிசைன், ஒயில்ட் வோர்ல்ட் ஸ்டண்ட் சார்பில் மார்க் டேவிட் இயக்கிய 'மாயா அன்லீஷ்ட்' குறும்படம் யூட்யூபில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாயா கூறுகையில், 'இந்தப் படைப்பின் பின்னணியில் இருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனுக்குத்தான் முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். ஒழுக்கமான பயிற்சி, கடினமான உழைப்பு, என ஒட்டு மொத்த குழுவும் என் மீது வைத்திருந்த நம்பிக்கை இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது. குறிப்பாக இந்த வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்று என் மீது பெரும் நம்பிக்கை வைத்த யானிக் பென்னுக்கும் நன்றி' என தெரிவித்திருந்தார்.
இந்த குறும்படத்தை முழு நீளப் படமாகத் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... 'நான் மதம் மாறினேனா?'- விளக்கமளிக்கும் மணிமேகலை