'100' படத்திற்கு பிறகு ஹன்சிகா நடித்துவரும் திரைப்படம் 'மஹா'. ஹன்சிகாவின் 50ஆவது படம் என்பதால் உடல் எடையைக் குறைத்து ரிஸ்க் எடுத்து நடித்துவருகிறார். அண்மையில் 'மஹா' படத்திற்காக சிகரெட் பிடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
நடிகர் சிம்புவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் ஹன்சிகா நகைச்சுவை நிறைந்த மசாலா படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'குலேபகாவலி', 'ஜாக்பாட்' படத்தை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்க இருக்கிறார். ஹாரர் கலந்த நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் ஹன்சிகா காவல் துறை அலுவலராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆட்டம், பாட்டம், காதல், கவர்ச்சி என ரசிகர்களை மூழ்கடித்த ஹன்சிகா முதன் முறையாக காவல் துறை அலுவலராக நடிப்பதால் இப்படம் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறாராம்.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகக் கச்சிதமாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன், இந்த முழுநீள நகைச்சுவை படத்தில் ஹன்சிகாவுடன் போட்டி போட்டு நடிக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு சுந்தர் .சி இயக்கிய 'ஆம்பள' படத்தில் ஹன்சிகாவும், ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.