'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சான் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கூர்கா'. இந்தப் படத்தில் யோகி பாபு, சார்லி, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
‘4 மங்கீஸ்’ ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய கரு. பழனியப்பன், “இன்று ராஜராஜ சோழன் குறித்து பேசுவது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. ராஜராஜ சோழனின் காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.
தற்போது தஞ்சையில் மீத்தேன் எடுப்பதாகக் கூறி நிலங்களை அபகரிக்கின்றனர். நாம் இப்போது அதைப் பற்றி தான் பேச வேண்டும். 30 கோடி மக்கள் வாழ்ந்த இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது வெறும் 30 லட்சம் பேர் மட்டுமே போராடினார்கள்.
அதுபோல சமூக பிரச்னைகளுக்காக நடிகர்கள் என்றும் குரல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். கூர்கா என்பது ஒரு இனத்தின் பெயராக இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை வாட்ச்மேன் என்பார்கள்.
வாட்ச்மேன் என்பவர்கள் நம்மை பொழுதுபோக்க உதவுபவர்கள். ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களாக நாம் பொழுதுபோக்க உதவினார்கள். இன்னும் ஐந்து வருடங்கள் கூட மக்களை பொழுதுபோக்க செய்ய உள்ளார்கள்” என்று கூறினார்.