இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியைக் காண காத்திருந்த ரசிகர்கள், திரையரங்குகளில் சூர்யாவின் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 5.30 மணிக்கு திரையிடப்பட்டது. நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு வந்திருக்கும் 'என்ஜிகே' படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் ஆர்வம் காட்டினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் என்ஜிகே படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் பாக்யராஜும் வந்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், 'என்ஜிகே' படம் பார்க்க முக்கிய காரணமே காண்ட்ராக்டர் நேசமணிதான். அவர் மீது சுத்தியல் விழுந்து அடிபட்டபோது முதலில் காப்பாற்றியது நடிகர் சூர்யாதான். சூர்யா நேசமணி மீது வைத்த பாசத்திற்காகவே இப்படத்தை பார்க்க வந்தேன். சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளன என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திண்டுக்கல், ஓசூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வந்த ரசிகர்கள் என்ஜிகே படம் குறித்த கருத்து தெரிவித்துள்ளனர். அப்போது, என்ஜிகே படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கிறது. படத்தை பார்க்கும்பொழுதே இது செல்வராகவன் படம் என்பது புரிகிறது. படம் திருப்திகரமாக உள்ளது. இது ஒரு சாதாரண படமாக எண்ணி, எதிர்பார்ப்போடு வருபவர்களுக்கு புரிவது கடினம்தான்.
இந்தப் படத்தை நான்கு முறை பார்த்தால் மட்டுமே புரியும். பக்கா செல்வராகவன் படம். சூர்யா இதில் நடித்திருந்தாலும் இது செல்வராகவன் படம்தான்' என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர்.