கரோனா தொற்று காரணமாக ஏராளமான தொழில்கள் முடங்கியுள்ளன. இதில் சினிமா துறையும் அடங்கும். சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் அப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகை பிந்து மாதவி, தர்ஷனா பாணிக் ஆகியோர் நடிக்கும் 'யாருக்கும் அஞ்சேல்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், ”தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளோம். இன்று நடைபெற்ற டப்பிங் பணியில் நடிகை பிந்து மாதவியின் குரல் பதிவு பணிகள் நடைபெற்றன.
ஊட்டியில் உள்ள தங்கள் பாரம்பரிய சொத்தை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார்கள் என்பதையும் விறுவிறுப்பாக விவரிக்கும் படம் 'யாருக்கும் அஞ்சேல்'.
தர்ட் ஐ என்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜூலு மார்கண்டேயன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவியும் தர்ஷனா பாணிக்கும் துணிச்சல் மிக்க சகோதரிகளாக நடித்திருக்கின்றனர். சவால் மிகுந்த ஊட்டியின் தட்பவெட்ப சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முப்பது நாள்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்” என்றார்.