தமிழ்நாட்டில் சில நாள்களாக பாலியல் தொல்லைகளால் பள்ளி மாணவிகள், இளம்பெண்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கோவையில் பாலியல் தொல்லையளித்த ஆசிரியரால், 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 26) மாணவிகளின் தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். முதலமைச்சரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தபடி உள்ளன. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, இயக்குநர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நம் நாட்டில் கல்லூரி, பள்ளிகள், தொழில் மையங்களில் பாலியல் தொல்லைகள் தொடர்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்கொரு தீர்வு கிடைக்காத என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்துள்ள்ளது. இந்நிலையில் ஒரு தந்தை ஸ்தானத்தில் வேதனையோடு முதலமைச்சர் கொடுத்திருக்கும் அறிக்கை மனதுக்கு ஆறுதலளிக்கிறது.
இதே உணர்வோடு அலுவலர்களும் செயல்பட்டால் நிச்சயம் பாலியல் தொல்லைகளும், பாலாத்காரங்களும் நம் நாட்டில் குறைய வாய்ப்புள்ளது. பெண் குழந்தைகள் தன்னை காத்துக்கொள்ள முதலமைச்சர் அறிவித்திருக்கும் தொலைபேசி எண் 1098-ஐ அனைத்துப்பெண்களும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்! 1098 என்ற எண் மகளிர் காக்கும் மந்திரமாக இருக்க வேண்டும்! நன்றி முதலமைச்சரே! விட்ராதீங்க முதலமைச்சரே!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி மறைவு; நடிகர் சத்யராஜ் இரங்கல்!