சேது, நந்தா, நான் கடவுள், பிதாமகன், பரதேசி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் பாலா. இவர் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாலா ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார். தனது முதல் ட்வீட்டாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல், பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அப்பதிவில் திருக்குறளின் செங்கோன்மை அதிகாரத்தில் இருந்து ‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி’ என்ற குறளை மேற்கோள் காட்டியிருந்தார். இந்த குறளின் பொருள், உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர் என்பதாகும்.