சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'கொலையுதிர் காலம்' நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு இயக்குநர் பாலாஜி குமார் தனது தாயார் பெயரில் காப்புரிமை வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு கொலையுதிர் காலம் பெயர் வைத்து திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்றும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் பாலாஜிகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த தடையை நீக்கக்கோரி படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் படத்தின் தலைப்புக்கு எந்த ஒரு காப்புரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தலைப்புக்கு எந்த ஒரு காப்புரிமை இல்லாத காரணத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.