சினிமா கனவு இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கின்றனர். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'குடிமகன்'. விஜய் ஆதித்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த ஏராளமான திரை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தப் படத்தின் இயக்குனர் விஜய் ஆதித்யன் கூறுகையில், "இக்குறும்படத்தைப் பார்த்து விட்டு திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர். பாடலாசிரியர் விவேக் 20 நிமிட குறும்படத்தைப் பார்த்து விட்டு, 20 நிமிடங்கள் பேசி வாழ்த்தியிருக்கிறார். படத்தின் வசனங்களை எல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டி ஊக்கப்படுத்தி இருக்கிறார் .
நடிகர் டேனியல் பாலாஜி முதலில் யார் நீங்கள்? என்று கேட்டார். பிறகு, கண்டிப்பாக இந்த நல்ல முயற்சிக்கு உதவி செய்வேன் நல்லா இருக்கிறது படம் என்று கூறியிருக்கிறார் . விஜய் மில்டனிடம் படத்தைப் பார்க்கச் சொன்னபோது, "நான் விளம்பரப்படுத்தியெல்லாம் பேச மாட்டேன். ஆனால் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஏதாவது உதவி செய்கிறேன் என்று கூறிவிட்டு நீ யாரிடம் உதவி இயக்குநராக இருந்தாய்? என்று கேட்டுள்ளார்.
நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை . இதுதான் எனது முதல் முயற்சி என்று சொன்னேன். உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். படம் வெளியான சில மணி நேரங்களில் இரண்டு லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. எனது திரைப்படத்திற்கான முன்னோட்டம் தான் இது.
ஒரு திரைப்படத்திற்கு உழைப்பதைப் போலவே இதற்கு அனைவரும் உழைத்தோம் .இந்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்திருக்கிறது. முழு ஈடுபாட்டுடன் செய்யும் முயற்சிக்கு என்றும் பலன் உண்டு" என்று கூறியுள்ளார்.