விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் படம் 'தமிழரசன்'. எஸ்என்எஸ் மூவிஸ் நிறுவனம் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், யோகிபாபு, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழா அடையாரில் நடைபெற்றது. இவ்விழாவில் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, விஜய் ஆண்டனி, ராதாரவி, படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டி. சிவா, ரம்யா நம்பீசன், ஒய்.ஜி. மகேந்திரன், ரோபோ சங்கர், மதுமிதா, மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், "கலைத் துறைக்கும் பாஜகவுக்கும் இப்போது நெருக்கம் அதிகமாகிவருகிறது. நிறைய திரைப் பிரபலங்கள் சமீபகாலமாக எங்களிடம் வருகிறார்கள். அதனால் தமிழ்நாடு மாற்றத்திற்கான மாநிலமாக மாறவிருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி விஷயத்திற்கும் பைரஸி விஷயத்திற்கும் உதவி கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பைரஸி என்பதை மக்கள் நினைத்தால்தான் தீர்வு காண முடியும். அடுத்தவர் உழைப்பை திருடக் கூடாது என்ற எண்ணம் வர வேண்டும். இது ராஜாக்கள் இருக்கின்ற மேடை. சின்ன வயதில் நாம் பார்த்து பிரம்மித்தவர்கள் இவர்கள். திறமையான கலைஞர்கள் பங்காற்றியுள்ள இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் உழைத்த அனைவரும் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இறைவன் அருள்புரியட்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "பாரதிராஜா-இளையராஜா பற்றி பேசும்போது இதற்கு மேல் யாராலும் இளையராஜாவைப் புகழ முடியாது என்று நினைத்தேன். திரைத் துறையில் இருக்கும் சில பிரச்னைகளை சிலர் குறிப்பிட்டார்கள். நிச்சயமாக இது குறித்து உரிய அமைச்சர்களிடம் பேசுவோம். எங்களோடு இணைந்து பயணிக்கும் திரையுலகினரை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன்.
இந்தப் படம் மிகச்சிறந்த திரைப்படம் என்ற உச்சத்தை தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் உண்டு. விஜய் ஆண்டனி எங்கள் ஊர்க்காரர். எங்கள் ஊரைச் சேர்ந்த நடிகர்களில் யாரும் பெரிதாக வரவில்லை. விஜய் ஆண்டனி மிகப்பெரிய நடிகராக அடையாளம் காண வேண்டும் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் பிறந்தவர் இமயத்தின் உயரத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.
மேலும் இயக்குநர் மோகன்ராஜா பேசுகையில், "இது ஒரு உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்கக் காரணம் என் மகன். அவன் இப்படத்தில் நடிகனாக அறிமுகமாகிறான். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், பத்திரிகையாளர்கள் எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதுபோல் என் மகனுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். விஜய் ஆண்டனி வாடா போடா என்று பழகும் அளவிற்கு நட்பு கொண்டவர்.
விஜய் ஆண்டனி என் மகனை நடிக்கக் கூப்பிட்டார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறேன் என்றும் சொன்னார். இதைவிட என் மகனுக்கு பெரிய பெருமை இருக்க முடியாது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.