தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாக கதை திருட்டு அதிகரித்து வருகிறது. முக்கியமாக பெரிய பிரபலங்கள் நடிக்கும் படங்கள்தான் இந்த கதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்படுகின்றன. 'சர்கார்' திரைப்படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படமும் இதே பிரச்னையை சந்தித்து வருகிறது. பிகில் திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல் உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் கதை என்னுடையது என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
தற்போது இவ்வழக்கு சம்பந்தமாக இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
"பிகில்" திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளதால் விஜய் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குநர் சதீஷ் என்பவர் 'பிகில்' கதை தன்னுடையது என்றும், கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருப்பதால், பிகில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில், பணத்திற்காகவும், விளம்பரத்துக்காகவும் அவர் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இயக்குநர் அட்லி தரப்பில், பிகில் கதையை தான் கடந்த 2018ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகவும், மனுதாரரின் கதை அக்டோபரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு முகாந்திரம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர் செல்வா தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிடும் முன்னர், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் எப்படி நீதிபதி அனுமதி அளித்தார் என கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
மேலும், பிகில் படத்தின் கதைக்கு இரண்டுபேர் உரிமை கோரியுள்ள நிலையில், பெரும் நடிகரின் படம் இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்டதை நினைத்து கோலிவுட் வட்டாரத்தில் பலரும் வேதனையடைந்துள்ளனர். 'பிகில்' திரைப்படத்திற்கு யுஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்த செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள நிலையில் இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'இத்தனை ஆண்டுகள் ஆகியும் நீ மாறலா...அப்படியே இருக்க' - 'மாமனிதன்' சீனு ராமசாமி