மலையாளத்தில் மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'அய்யப்பனும் கோஷியும்'. முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருந்தது, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் நஞ்சம்மாள் பாட்டி பாடிய 'கலக்காத்தா சந்தனம் மேரா வெகு வேகா பூத்திருக்கு, பூப்பறிக்க போகிலாமோ' பாடல் கேரளாவைத் தாண்டி பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண், ராணா டகுபதி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார். இந்தபடத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் நடிகரும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ளார்.
தற்போது இந்தி படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. அதன்படி இந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம், அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தோஸ்தானா படத்துக்கு பிறகு இதில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
'அய்யப்பனும் கோஷியும்' இந்தி ரீமேக்கை மிஷன் மங்கல் இயக்குநர் ஜெகன் ஷக்தி இயக்கவுள்ளார். தற்போது பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கும் பணியை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.