'விஸ்வாசம்' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ள நிலையில், 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 16ஆம் தேதி வெளியான இப்படத்தின் ட்ரெய்ர் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. படத்தின் ட்ரெய்லரில் அஜித் பேசிய வசனங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கும் ஆனது.
'நேர்கொண்ட பார்வை', 'பிங்க்' படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்திருந்தார். அதேபோல் படத்தின் ட்ரெய்லர் ரசிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் எதிர்பார்ப்பை விட அஜித் 60ஆவது படத்தின் எதிர்பார்ப்புதான் ரசிகர்களை அலைமோத வைத்துள்ளது.
இப்படத்தில் அஜித் பைக் ரேசராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அஜித் 60ஆவது படத்தையும் நேர்கொண்ட பார்வை பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என அஜித் தெரிவித்துள்ளாராம்.
பைக் ரேசராக நடிக்க இருப்பதால் அதற்கான பயிற்சியை அஜித் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் 'அஜித் 60' படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.