தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜூன். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ஏரளமான ரசிகர்கள் உள்ளனர்.
அல்லு அர்ஜூன் தற்போது 'புஷ்பா' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கரோனா காலத்தில் புகை பிடிப்பவர்கள் கரோனவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே மருத்துவர்கள் புகை பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். மாற்றத்தைத் தூண்டுவதற்கு நடிகர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் புகை பிடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் புகை பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், " புகை பிடிப்பதின் தீமைகளை குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 1990களின் காலகட்டத்தில் மேற்கத்திய கலாசாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோதுதான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில் அது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.
தற்பொழுது 2021இல் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகை பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது. இதற்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மேலும் மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன்.
எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம்கூட நம்மை சீரான, ஆரோக்கியமான பாதைக்கு அழைத்து செல்லும் என நான் நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: சினிமாவில் அடியெடுத்து வைத்த அல்லு அர்ஜூன் மகள்