பேபி ஷாலினியாக திரையுலகில் அடியெடுத்து வைத்து தனது இயல்பான நடிப்பால் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உச்சம் தொட்டவர் இவர்.
குழந்தை நட்சத்திரம் முதல் நடிகையாக வளர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1983இல் மலையாளத்தில் வெளியான ஆத்யத்தே அனுராகம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி ஷாலினி, தமிழில் ஓசை திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பிள்ளை நிலா, சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகையாக வலம்வரத்தொடங்கிய ஷாலினி அனியத்தி பிராவு என்ற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின் தமிழில் நடிகர் விஜய் உடன் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதே போன்று நடிகர் அஜித்துடன் கைகோர்த்த படம்தான் அமர்க்களம்.
இந்தப் படமே ஷாலினியின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. நடிகை என்ற அந்தஸ்தைக் கடந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிக்கும் நடிகர் அஜித்தின் காதலியானார்.
தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட படங்களில் நடித்த பின்னர் சினிமாவுக்கு விடை கொடுத்து குடும்பத் தலைவியாகி இரு குழந்தைகளுக்கு தாயாக அஜித் உடன் கைகோர்த்து நடக்கிறார்.
இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகரின் உலகமாக இருக்கும் ராணி ஷாலினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!