தெலுங்கு நடிகை காயத்ரி ராவ், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு பல்வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும், அதில் பலர் ஆபாசமாகப் பேசுவதாகக் கூறி புகார் அளித்திருந்தார்.
சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன் ஆகிய மூன்று நபர்களின் பெயரையும், அவர்களது எண்ணையும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
மேலும் காயத்ரி ராவ் குறிப்பிட்ட மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பினர். இதையடுத்து செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், ஆபாச வீடியோக்கள், தகவல்கள் பகிர்ந்து கொள்வதற்காக, அவர்கள் வைத்திருந்த வாட்ஸ் அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவ் எண்ணை ஒருவர் பதிவிட்டு இருந்ததாகவும், அதைவைத்து தொடர்புகொண்டதும் தெரியவந்தது.
வாட்ஸ் அப் குரூப்பில் காயத்ரி ராவின் எண்ணை பதிவிட்ட நபர் யார் என விசாரித்தபோது, அது டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் பரமேஸ்வரனை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று காயத்ரி ராவ் ஆன்லைன் மூலமாக பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அந்தப் பீட்சாவை டெலிவரி செய்ய பரமேஸ்வரன் காயத்ரி ராவிற்கு அடிக்கடி செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். டெலிவரி கொடுக்கும்போது பரமேஸ்வரனுக்கும், காயத்ரி ராவிற்குமிடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த நிலையில் காயத்ரி ராவின் நம்பரை, வாட்ஸ் அப் குரூப்பில் பழிவாங்கும் நோக்கத்தில் பதிவிட்டதாகப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகை காயத்ரி ராவின் வீட்டில் உள்ள சி.சி.டிவி காட்சியில் பிரச்னை நடந்தது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து டாமினோஸ் பீட்சா நிறுவனத்திடம் கேட்டபோது பரமேஸ்வரனை பணி நீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!